Wednesday, December 26, 2012

கட்டுரை-பாரம்பரிய பரதத்தில் நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

பாரம்பரிய பரதத்தில்
நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

    பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எனது தோழியுடன் (ஆங்கிலத்தில் எழுதுபவள்) தஞ்சாவூரில் பல கிராமங்களூக்குச் சென்று நாதஸ்வரக் கலைஞர்களைக் கண்டு அவர்களின் தற்கால நிலை பற்றி அறிந்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எழுதுவதற்காக சென்றிருந்தேன். எங்களுடன் ஒரு மூத்த நாதஸ்வரக் கலைஞர் அவர்களின் பேரனும் உடன் வந்திருந்தார். அவரும் நாதஸ்வரக் கலையை இன்னமும் பரவலாகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கோவில்களில் பரந்த மண்டபங்களிலும், வெளிப் பிரகாரங்களிலும், கோவிலைச் சுற்றியுள்ள தெருச் சந்திப்புக்களிலும் நாதஸ்வர ஓசையும், தவிலின் கம்பீரமும், சலங்கையின் நாதமும் நிறைந்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது என் மனதில்.  
    ஒரு கோவிலில் கல் நாயனம் கண்டேன். அதை  அதற்காவே ஏற்படுத்திய ஸ்டாண்டில் வைத்து வாசிப்பார்கள் என்றனர். யானையின்  தந்தத்தில் இரண்டு நாதஸ்வரம் அக்கோவிலில் இருந்தது எனவும், அதில் ஒன்று தற்போது சென்னையில் ஒரு பெரிய மனிதரிடம் இருப்பதாகவும், மற்றொன்று வேறு ஒருவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். தந்த நாயனமோ, கல் நாயனமோ இப்போது உபயோகத்தில் இல்லை எனினும், அதை வாசித்த பரம்பரை இன்னமும் இருக்கிறது. தந்த நாயனத்தில் காற்று ஊதி உள்ளிழுக்கும் பொழுது அதன் ஊடாக ஊடாடி வரும் காற்று உடலுக்கு மிகுந்த உஷ்ணத்தை கொடுக்கும், அதனால் வாய் மற்றும் மூக்கு வழியே குருதி வெளிப்படும். அதை ஈடுகட்ட நிறைய உருக்கிய நெய் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். அதன் நாதம் எவ்வாறு இருக்கும்? கல் நாயனத்தின் உள்ளே காற்று செலுத்த நிறைய பிரயத்தனப் பட வேண்டுமா?அதை முதலில் கண்டு பிடித்தவர் யார்? அதை வாசிக்கத் தெரிந்தவர் இன்னமும் யாராவது இருக்கிறர்களா? 
    நாதஸ்வர இசை செழித்து எல்லோர் இல்லங்களிலும் சலங்கையும், ஓசையும் பொங்கிக் கொண்டு இருக்கும் என்று என் மனதில் குதூகலம் இருந்தது. எனது குதூகலம் வெறும் புனைவாகவே இருந்தது. நிறைய நாதஸ்வர வித்வான்களின் வீடுகளில் வாசிப்போர் இன்றி ஒரு தூசி படிந்த உறையில் இட்டு நாதஸ்வரம் தொங்கிக் கொண்டு இருந்தது. அடுத்த அடுத்த சந்ததியினர் பல பணிகளைக் கற்று வேற்றூரில் அல்லது நாட்டில் வசிப்பதை 'அப்பாடா' என்ற நிறைவுடன் கூறினர். இசை கல்லூரியில், நாதஸ்வரம் கற்றுக் கொள்ள உதவித் தொகை அளித்தும் கூட ஐந்து அல்லது ஆறு மாணவர்களே கல்வி மேற் கொண்டிருந்தனர். கோவில்களில் பூஜைக்காக வாசிக்கும் சிலர் இருந்தனர். மனம் மிகவும் கனத்தது. சென்னை போன்ற பெரு நகரங்களில் டிசம்பர் மாதத்தில் மட்டும் அதாவது, இசை விழாக் காலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன என்று ஒரு கூற்று தெரிவிக்கிறது .அதில் எத்தனை நாதஸ்வரக் கச்சேரி? விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்போதும் சில விரல்கள் மீதமாக நெரலாம். ஆரம்ப நாட்களில் இசைக்கப்படும் மங்கள இசை தவிர. ஆனால் அதற்கு பிறகு பெரும் முயற்சியில் தற்போது நாதஸ்வரத்திற் கென்றும் கச்சேரிகள் ஏற்பட்டுள்ளன. அதே இசை வேளாளர் பரம்பரைச் சார்ந்த பெண்கள் பலர் தன்னை இறைவனுக் கென்றே அற்பணித்துக் கொண்டு, மிகுந்த அறிவும், சுதந்திரமும், கல்வியும் கொண்டு விவாதங்கள் புரிந்து, விரிவுரை ஆற்றி கலை நிகழ்த்தி கலைக்காகவே வாழ்ந்து இருக்கின்றனர். வாழ்ந்தும் வருகின்றனர் இன்னமும் வெகு சிலர், மீதமுள்ளோர்.

    பரத நாட்டியம் என்பது நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. பரத  சாஸ்திரம், ரிக் வேதத்தில் இருந்து சொற்களையும், உரையாடலையும், சாம வேதத்திலிருந்து இசையையும், யஜுர்  வேதத்திலிருந்து உணர்வுகளையும், அதர்வண வேதத்திலிருந்து அழகியலையும் எடுத்து, திரட்டி ஐந்தாவது படைக்கப்பட்ட ஒன்று என்றும் புராணம் கூறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட நாட்டிய சாஸ்திரத்தை வைத்துக் கொண்டு வெறுமே படித்து அதை உடலில் கொணர்ந்து ஆடிவிட யாராலும் இயலாது. நாட்டியத்தை நிகழ் கலையாக உருவாக்கியதை  பல நூற்றாண்டுகளாக கற்பித்து, நிகழ்த்தியும் காத்தும் வரும் நட்டுவனார்கள் இல்லை என்றால் இது உயிரோடு இருந்திருக்குமா? கற்பித்தலை மட்டுமே வாழ்வாகக் கொண்டிருந்ததினால், தனது நிகழ்ச்சிகள்,. அதன் மேடை ஏற்றம், அதன் மூலம் மற்றவை என எதைப்பற்றியும்  அக்கறை கொள்ளாமல் சொல்லிக் கொடுத்து  வளர்ப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி இருக்கின்றனர்.

    கற்பவரின் உடல் பாங்கு, அவர் வாழ்விடத்தின் சூழல் என சில அடிப்படை மாற்றங்களைக் கணக்கெடுத்து, சொல்லிக் கொடுத்து அக் கலையை வளர்த்தனர். மெல்ல மெல்ல கலைஞர்களின் வாழ்வியல் முறை மாற்றத்திற்கு ஆளாகிப் போயிற்று. பரத கலை கோவில்களையும், பக்தியையும் விட்டு நகரம் நோக்கிப் இடம்பெயரத் தொடங்கியது. இசை வேளாளர் பாரம்பரையில் இல்லாத மற்றவர்களும் பயில்வது   ஆரம்பம் ஆயிற்று. நகரம் நோக்கி எடுத்து வந்தவர்கள் பலர். கற்பிக்கும் பலரும் பரத்தத்தில் தமக்குத் தோன்றிய மாற்றங்களை செய்ய முற்பட்டனர். மெல்ல மெல்ல பரதம் பரவத் தொடங்கியது நகரத்தில் தன் இயல்பை விடுத்து. இதற்கான பெருமை, புகழ், பரவப் பரவ கற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக கற்பிப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. கற்பத்தலில் பணம் பண்ண ஆரம்பித்தனர். கலை சிறிது சிறிதாக நீர்க்கத் தொடங்கியது.

    நகரங்களில், பெரு நகரங்களில் கற்பிக்க என காளான்கள் போல் அனுபவமற்ற, சிறிதே கற்ற  பலரும், தங்களுக்குத் தெரிந்த அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை  தனி நிறுவனமாகவும், கல்விக் கூடங்களிலும், பெரிய நாட்டியத் தாரகைகளின் பள்ளிகளில் ஆரம்பப்பாடம் கற்பிப்பவராகவும்  பணிபுரிய ஆரம் பித்தனர். அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை சில வருடங்கள் பகுதி நேரமாகப் பயின்றனர் பலர். அதில் பொருளாதார மற்றும் செல்வாக்கு உள்ளவார்களின் பிள்ளைகள் மேடை ஏறத் தொடங்கினர்.

    வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களும், தங்கள் குழந்தைகள் இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதில் ஒரு பகுதியாக பரதத்தை உணர்ந்து கொண்டிருக் கின்றனர். எனவே நீண்ட நாட்களாக வாழும் இந்தியர்கள், தற்காலிகமாக குடி பெயர்ந்து இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பரதம் பயில அனுப்புகின்றனர். இது வெளி நாட்டுப் பணம் மற்றும் மோகத்தை இங்கிருக்கும் நாட்டிய ஆசிரியர்ககளுக்கு ஏற்றி விட்டிருக்கிறது. எனவே, சில நாட்கள் பயணம் என வெளி நாடுகளுக்குக் கற்பிக்கப் பயணப்படுபவர்கள் அதிகமாகி விட்டனர்.

    ஆனால் வெளி தேசத்தில் வாழும் மக்களிலும் கலையை மிக உன்னதமாகக் கருதி, அதில் தம் முழு நேரத்தையும் செலவிட்டுக் கற்பிக்கும், கற்கும் மக்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். ஆழத்தையும் உணர்ந்து கற்று நிகழ்ச்சிகள் தந்து, கற்பிக்கும் கலைஞர்களும் இருக்கின்றனர். அவர்களிடம் புதுமை, பழமைக் குழப்பம் இருப்ப தாகத் தெரியவில்லை. புதுமையைத் தனியாகவும், முழுதான பாரம்பரியத்தை தனியாகவும் உணர்ந்து செயல் படுகின்றனர். கலையின் வேரைத் தேடி இந்தியாவிற்கு வரும் பொழுது முழுமையாக தனது நேரத்தை அதற்காக செலவு செய்கின்றனர். பணத்தையும் கூட.. தேடித் தேடி அலைந்து கற்றுக் கொள்கின்றனர்.  டிசம்பர் மாத விழாக்களில் பல சபாக்களில் அவர்களைக் காணலாம். இதன் மற்றொரு பகுதியும் வெளி தேசங்களில் நிகழ்கிறது.சீசனுக்கு இந்தியா வந்து, நடனக்கலைஞர்களிடம் மணிக்கு இவ்வளவு டாலர் எனக் கொடுத்து இரண்டு அல்லது நான்கு வாரங்கள் மட்டும் கற்றுக் கொண்டு ஊர் திரும்புகிறவர்களும் உள்ளனர்.  அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் இன்னாரின் சிஷ்யர் என்று போட்டுக் கொண்டு அவர்களின் வழி பரதம் எனக் கூறிக் கொண்டு கற்பிக்கவும் செய்கின்றனர். விவரம் தெரியாதவர்கள் இவர் பெரிய குருவிடம் ஏதோ பத்தாண்டுகள் பயின்றவர் என்று எண்ணுகின்றனர்.  இப்போது இன்னமும் ஒரு வடிவமும் பரதம் பெற்றுள்ளது. அதாவது, வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை இந்தியாவில் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்வதற்காக பல சபாக்களில் பணம் கொடுத்து ஆடி, சி.டியும் , வந்த விமர்சனங்களையும் எடுத்துக் கொண்டு திரும்புகின்றனர். எனவே, சில சபாக்கள் Only for N.R.Is என ஏற்படுத்திக் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

    இசை வேளாளர்கள் பாரம்பரியத்தில் வந்த நாதஸ்வரம் ஒரு பக்கம் குறுகிக் கொண்டு வந்துள்ளது. அவைகளின் பரதம் நகர மற்றும் பணக்கார மேட்டுக் குடி மக்களால் பறிக்கப்பட்டு பணம் கொழிக்கிற வியாபாரமாக மாறி விட்டிருக்கிறது. இரண்டும் இன்றி ஒரு சாரார் மிகவும் பின் தங்கி இருகின்றனர். நிறைய எதிர் மறையாகவே பேச வேண்டி வருவது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

    டிசம்பரில் செனையில் 2000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள். ஒருவரே பல சபாக்களில் நிகழ்ச்சி தருதல், எங்கெங்கும் சபாக்கள், எங்கெங்கும் சலங்கை ஒலிகள். ஆனால், அவைகள் அநேகமாக வெகு சிலரே அமர்ந்திருக்க, பெரும் பாலான இருக்கைகள் காலியாக இருக்கும் அரங்காகவேதான் காட்சி அளிக்கறது. இதில் மிகவும் பரபரப்பாக இயங்கி பணம் பண்ணுகிறவர்கள், பக்க வாத்யக்காரர்களும், பாடகர்களும்தான். பலருக்கும் ‘ரிகர்சல்' எனப்படும் பயிற்சிக்காக நேரம் ஒதுக்க முடியாமல், காலை ஒரு நடனமணிக்கு, மதியம் ஒரு நடனமணிக்கு, மாலை ஒரு நடன மணிக்கு எனப் பறந்து பறந்து காரில் சென்று கொண்டிருக்கின்றனர்.

    எனவேதான், நாம் உண்மையான கலையை அதன் ஆழத்தையும், நேர்த்தியையும் உணர்ந்து  அவற்றை அடைய முயலும் கலைஞர்களைக் கண்டு கொண்டு அவர்களின் பாரம்பரியம் வழுவாக் கலையை இன்னமும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, காளான்களை அழித்து விருட்சங்களை போஷிக்க வேண்டும். இங்கு நான் சில நிகழ்வுகளை இதற்காகத்தான் பதிவு செய்து உள்ளேன். நடனத்தில் நவீன முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அது இன்னமும் செழுமையையும், உறுதியான வடிவமைப்பையும், ஆழத்தையும் பெற வேண்டும் என்பது என் எண்ணம்.
வளரும்

Friday, December 21, 2012

குப்பை-காகிதங்கள்-குப்பை- கட்டுரை

குப்பை-காகிதங்கள்-குப்பை


‘சுடிதார் தைக்கணுமாம்மா' பணிவன்புடன் கை நீட்டி காகிதம் ஒன்றைத் திணித்துத் திரும்புகிறான் ஒரு சிறுவன்.'  கணிணி படிப்புங்கண்ணா' மற்றொரு சிறுவன் கை நீட்டி அளிக்கிறான், ஒரு வண்ணக் காகிதத்தை.'உடல் பருமன் ஒரு வாரத்தில் குறைய' என்ற சொற்கள் தாங்கிய பெரிய தொப்பை கொண்ட பெண் உருவம் அச்சிடப்பட்ட வழவழத்தாளை நீட்டுகிறாள் ஒல்லியான ஒரு இளம் பெண்.  இந்த மூன்று வகைக் காகிதங்களாலும், அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் விநியோகிக்கப்படும் காகிதங்கள் என் கைக்குக் கிடைக்காது. நான் எப்போதும் அவற்றை வாங்க மாட்டேன். காகிதத்தின் அருமை தெரியும்.

பெண் முகமும் தலையும் இல்லாமல் பிதுங்கிய மார்பகங்களுடனும், அதற்கு கீழே சட்டையை விட்டு வெளியே பேண்டுக்கும் இடையே நீட்டிக் கொண்டிருக்கும் இடைப் பட்ட வெள்ளைத் தோல் பிரதேசத்துடனும், நடுவில் துருத்திக்கொண்ட தொப்பையும் வண்ணப்படத்தில் அச்சிடப் பட்டிருக்கும் .

அட்சய திருதியைக்கு கடவுள் படமிடப்பட்டு, ((கைகளிலிருந்து தங்கக்காசு கொட்டிக்கொண்டிருக்கும், மற்றொரு கையால் அருள் பாலிக்கும் காசின் கடவுள் படம், சில நொடிகளுக்குப்பின் எல்லோருடைய  காலடியின் கீழும் மிதிபட்டுப் புரளும்.) கடையின் பெயர்களுடன் தள்ளுபடியில் தங்கக்காசுகள், நகைகள். .கடையின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும். மிகுந்த  விலை உயர்ந்த தாளில் வண்ணத்துடன் கூடிய  நோட்டீஸ்  கூட்டம் அலை மோதும் தெருவில் எல்லோர் கைகளிலும் கொடுக்கப்படும். அந்தத் தெருவில் யாருடனும் இடிக்காமல் நடக்க முடியாது. பெண்களைக் கவர்ந்திழுக்க கடையின் வாசலில் அழகழகான வண்ணக்கோலங்களும், வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்ட  நுழைவாயிலில்  ஏறும் போதே தங்கள் வீட்டில் திருமணம் கைகூடி விட்டதாக கனவுடன் படி ஏறும் கூட்டம். கடைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எரிக்கும் வெய்யிலுக்கு இதமாக செயற்கைக் குளிரூட்டப்பட்ட காற்றும் என எல்லாவற்றையும் கடந்துதான் நான் செல்கிறேன். இலவசமாக விநியோகிக்கும் எதையும் எல்லோரும் கைநீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். வண்ணவண்ண அந்தக் கையகலத் தாள்கள், பெரியவர்கள் கைகளில் கொடுக்கப்பட்டவுடன் தனக்கும் ஒன்று என்று கைநீட்டி வாங்கிக் கொள்ளும் குழந்தைகள். பெரியவர்கள் செய்வதையே தானும் செய்யும் குழந்தைகள். இளைஞர்கள் நடுத்தர வயதினர், வயோதிகர் என எல்லோரும் கைநீட்டி வாங்கிக் கொள்கின்றனர். ஓரிரு அடிகள் நடப்பதற்குள், காகிதத்தை படித்தும் படிக்காமலும், மடித்தும் மடிக்காமலும், எந்தவித நுண் உணர்வும் இல்லாமல், தங்கள் காலடியில் நழுவ விடுகின்றனர். ஏறக்குறைய நூறு அடிகளுக்குள் வழியெங்கும் (ரயிலடியின் வெகு அருகில் கடைகள் மட்டுமல்ல குப்பைகளும் நிறைந்திருக்கும்) ரயில் நிலையம் செல்லும் வழியில், படி எங்கும், நிறைந்து இறைந்து கிடக்கும் அவற்றைப் பார்க்க பார்க்க மனம் கொதிக்கும்.அட்டைக்கு மட்டுமே வண்ணத்தை ஓடவிட்டு விட்டு, அதுவும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்,  உள்ளே அனைத்தையும் கருப்பு வெள்ளையில் அடைத்து திணித்து நிரப்பி உயிரையும், உயிர்காற்றையும், வலியையும், வேதனையும், காதலையும், காமத்தையும் கொட்டி எழுதிய நூல்கள் தயாரிக்கிறேன். என் ஆசை அளவிற்கு எந்த நூலையும் செலவு செய்து கொண்டுவர முடியவில்லை. ஓவியம் பற்றிய நூல்களைக்கூட கருப்பு வெள்ளையில் வடித்தும், அதையே படித்தும் வர வேண்டிய நிலை. .நிகழ்த்துக்கலைகளைக் கூட அப்பி வைத்த கருப்பு வெள்ளையில் வண்ணங்களைத் துடைத்து எறிந்துவிட்டு அதையே வெள்ளையாக்கி வண்ண ஜாலம் காட்டி வித்தையும் காட்டுகின்றன நூல்கள். வண்ணத்தில் அடிக்க பணம் கொடுத்து மாளாது.

சிற்றிதழ் தயாரிப்போர் ஒவ்வொரு இதழையும் வழ்க்கையைப் பணயம் வைத்து உறவுகளுடன் முரண்பட்டு வெறி பிடித்தது போல வெளிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்தப் பணக்கார வியாபாரிகளின் விளம்பரமோ வழவழ வண்ணத்தாளில், அழாழகாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அதை வாங்கி ஓரிரு நொடிகளில் நழுவ விடுகின்றனர். எத்தனை மரங்கள்? அதிலுள்ள எத்தனை சிற்றுயிர்களை அரைத்துப் பூசிய காகிதமது?  

தேர்வு முடிந்து அடுத்த கட்டத்துக்குப் போகும் மாணவர்களைக் கவர்ந்திழுக்க இப்போது ஜூன் ஜூலையில் என்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம், என்று வழிகாட்டும்(?)  காகிதங்கள் தெருவெங்கும்.  என்னால் இப்ப்டி செலவு செய்ய முடியவில்லையே என்ற பொறாமையும் இதில் கொஞ்சம்  கலந்துதான் இருக்கிறது. வெள்ளைத் தாள்கள் வண்ணம் பூசப்படுவதற்கான காரணம் இன்னமும் கொஞ்சம் மக்களை வழி நடத்துவதாகவோ, மக்களை விழிக்கச் செய்வததகவோ இல்லாமல் முட்டாளாக்கும் செயலைத் திறம்பட அதிகம் செலவழித்து விழும் விட்டில் பூச்சி ஆக்குகிறார்களே என்ற கவலையும் இணைந்துதான்  இதைச் சொல்ல வைக்கிறது.

.

கவிதை

மெய்__ஞானம்

அறியாத வயதில் கேட்டதுண்டு,
காயம் போய், காற்றடைத்த பை என்று.

ஒரு நாள்,

பிளாஸ்டிக் பையில்  காற்றடைத்து
பின் நீரில் விட்டேன் அது பெரும்
உருவெடுத்து உப்பி கம்பீரமாக --
மிதந்து மிதந்து சென்றது.

பின்னர் ஒரு நாள்,

மழையில் ஓடும் சிறு நீர்த் தாரையில்
காகிதப் படகு செய்து மிதக்க விட்டேன்
காற்று நிறைந்து அது காற்றுடன் கலந்து
காற்றிருந்த மட்டும்
மிதந்து பின் நீர் நிறைந்தவுடன் --
மிதக்காமல் மூழ்கியது.

பிறகும் ஒரு முறை,

காலியான டப்பாவில் மூடியிட்டுக்
காற்றடைத்துத் தொட்டியிலிட்டேன்
அதுவும் நீரில் மிதந்து அலை அலையென
அசைந்து அசைந்து நெளிந்தது.
திரவம் நிரம்பிய அக்கணமே
உள்சென்று மூழ்கியது.

விவரம் அறிந்து,
விஞ்ஞானமும், மெய்ஞானமும் கற்றபின்


நீரைவிட அடர்த்தி குறைவெனில்
திரவத்தில் மிதக்கும்
கெட்டிப்படுத்தப்பட்ட நீரும்
நீரில் மிதக்கும், அசையும்.

பிரம்மாண்டமான கப்பலும்
பெரும் நீரில் மிதக்கும் காற்று மட்டும்
உள்ளிருந்தால் அடிநீர் 
மூழ்கித்தான் போகும் என்றும் அறிந்தேன்.

எல்லா உயிர்களிலும் மேலானவன்.
ஆறறிவு உள்ளவன்.
அவனே கடவுள்.
அவனே மனிதன்.

ஆனால்,

நானறிந்த பெண் ஊர் அறியா
வயிற்றுச் சுமையுடனும், வளர்ந்த
தன் மற்றொரு சிசுவை வயிற்றுடன்
துண்டிணைத்துக் கட்டி
சப்தமின்றி நடுநிசியில்
வீட்டுக்கினற்றுள்
காற்று நிறைந்த பைகளாய்
கீழிறங்கி வீழ்ந்தனர்.

காற்றுடன் பைகளாக இருந்த போது
நீருக்குள் மூழ்கியும், மூச்சற்றுப்
பேச்சற்றுக் காற்றும் அற்ற பைகளாய் நீர் நிறைந்திட்ட பின்
ஈருயிரும் சிசுவும்  மேலெழும்பி
அசைந்தன உப்பி, அப்போது

என்னுள் இருந்த விஞ்ஞானமும்
சித்தரின் மெய்ஞானமும்
என எல்லாமே நொறுங்கிப்போய்
ஏன், ஏன், ஏன் என்ற கேள்வியே
மேலெழும்பி மிதந்தது என்னுள்
காற்றும் நீரும் நிறைக்காமலேயே.