Monday, February 4, 2013

வந்தடையும் பறவைகளும், வந்து செல்லும் மனிதர்களும்

தோழி இதழுக்காக

வந்தடையும் பறவைகளும், 
வந்து செல்லும் மனிதர்களும்.

மாம்பலம் ரயில் நிலையம் எனக்கு ஒரு யானையை நினைவுறுத்தும். எப்போதும் அசைந்துகொண்டே இருக்கும் அது. ஆட்கள் அருவி என படிக்கட்டுக்களில் ஏறியும் இறங்கியும் வழிந்தோடுவார்கள். தொடர்வண்டி வந்து நின்றவுடன், அதிலிருந்து அசைந்து அசைந்து ஆண்கள், குழந்தைகள், பெண்கள் பைகள் என நிலையம் பொங்கி வழியும். ஏறும் போதும் இறங்கும் போதும் எப்போதும் மனிதர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். கூட வந்தவர்களில் யாராவது ஏற இயலாமல், அல்லது இறங்க இயலாமல் போயிருக்கலாம். ஸ்டேஷனின் நடுநடுவே நாய்கள் பூரண அமைதியுடன் தூங்கிக் கொண்டு இருக்கும். டிக்கட் இன்றி தெரிந்தும், தெரியாமலும் பயணம் மேற்கொண்டோர் மன உளைச்சலுடன், அல்லது அற்று அதிகாரியின் அறை வாயிலில் நின்றபடி. எல்லோர் கைகளிலும் காசோ, கார்டோ கண்டிப்பாக இருக்கும். ஆண்டின் பண்டிகைகாலத்தை, எல்லா மதத்தினருடையதையும் அந்த ரயில் நிலையம் கூட்டத்துடன் கொண்டாடும்.

‘நான்' என்ற அடையாளம் கரைந்து போக என்னால் தேர்ந்தெடுக்கப்படும் இடம், மாம்பலம் ரயில் நிலையம்.  அது எப்போதும் புதிதுபுதிதான மக்களுடன் இருக்கும்.

இத்ததனைக்கும் நடுவில் நீங்கள் எதிர்பார்த்தே இருக்க முடியாதபடி ரயில் நிலையத்தில் மேற்கு மாம்பலம் பக்கமாக, நடைமேடையின் கடைசியில் ஒரு பெரிய ஆலமம்.  அதில் பாதி மரம் நிலையத்தினுள் நீட்டிக் கொண்டிடுக்கும். அதன் அடியில் முன்பெல்லாம் வாகனங்கள் நிற்கும். இப்போது மரம் மட்டும். மாலை ஐந்தரை மணியிலிருந்து ஏழு மனிவரை ஆந்த மரத்தின் மீது நூற்றுக்கணக்கன பறவைகள் வந்து அமரும். மைனாக்கள், கிளிகள், குயில்கள், காக்கைகள் இன்னமும் சிறியதும் பெரியதுமான  அத்தனை பறவைகளும் கூச்சலிட்டுக் கொண்டே அமரும். சிலது பறக்கும். மரத்தின் எல்லா இலைகளும் ஏதோ பொந்தை போல அத்தனை பறவைகள¨யும் உள் உறிஞ்சிக் கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக ரயில் போக வர, மனிதர்கள் ஏற இறங்க என அனைத்து இயக்கங்களும் நடை பெற்றுக் கொண்டே இருக்கும். ஆனாலும், பறவைகள் அம்மரத்தில் வந்தடையும். மாலை மெல்ல மெல்ல இருட்டாக மாறத்தொடங்கும் போது மரமும் பறவைகளும் ஒட்டு மொத்தமாக கருமை பூசிக் கொள்ளும். குரல்கள் மட்டும் மரத்திலிருந்து அசைந்து அசைந்து வெளிப்படும். பின் அதுவும் தேயும். நகரத்தின் சந்தடிகளுக்கு அவைகளும் பழக்கப்பட்டு விட்டன. ஏதோ பெஞ்சில் அமர்ந்தபடி நான் அங்கு நடைமேடையில் இருப்பேன்.

ஒரு நாள் மாம்பலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருந்ததாக செய்தி வந்த வண்ணம் இருந்தது. புரளி என்றும் சொல்லப்பட்டது. சற்று நேரத்திற்கு பிறகு நான் ரயில் நிலையம் சென்றடைந்தேன். அசையாத நிலையில் முன்பு  யானை  இருந்த கொட்டகையாக காலியாக ரயில்நிலையம் இருந்தது.  நிறைய மக்களால், மனிதர்களால் அசையாமல், சில மக்களுடன் இருந்தது அந்த இடம். ஆனால் மரம் முழுக்க எப்போதும் போல பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தன. வந்தடையும் பறவைகள் ஒன்றே. வந்து போகும் மனிதர்கள் வேறு வேறு வகையினர். அடுத்த முறை நீங்கள் ரயில் நிலையம் செல்லும் போது அந்த மரத்தையும் சில நொடி கவனியுங்கள். வேறு வேறு இனத்தைச் சார்ந்தவைகள் அவைகள். ஆனாலும் பேதமற்று ஒரே மரத்தில் அடைகின்றன.

No comments: