Friday, October 11, 2013

வலியுற்றும் வலியற்றும்.



01.
 உடலெங்கும் சீழ் வடிகிறது
வெட்டுண்ட ரப்பர் மரமென
தண்டு மரம் என ஆங்காங்கே
வெள்ளை திரவம் மேலிருந்து கீழாய்.
 கீறிவிட கீறிவிட, இன்னமும்
விரைவாய்க் கீழிறங்கி வருகிறது.
வழிகிறது, துர் நாற்றத்துடன்.
நோயுற்றவன் எண்ணுகிறான்,
உடல் ஒரு நோய்க் கிடங்கென்று.
‘ஊத்த சரீரம்'
பட்டினத்தாரும் பலரும் சொன்னது
சரியென்று எண்ண....
தொடர முடியாத வலி பட்டினத்தாரைப்
பறந்தோடச் செய்கிறது.
நிரம்பித் தளும்பும் வலியை
எந்த துவாரத்தின் வழியே வெளியேற்ற?
துவாரங்களால் விரும்பப்பட்ட இவ்வுடல்
துவாரங்களால் நிரம்பப்பட்ட இவ்வுடல்
துவாரமின்றித் தவிக்கிறது.

வலியை வெளியேற்ற இயலாமல்
மயங்கிச் சரிகிறது உடல்.
________________________________________________

02-.
 நீலச்சுழல் ஒளிர் விளக்கு தலையில்
சுழல, நீளமாக
விட்டு விட்டு குழல் ஒலியிட்டு
வலி நிறைந்த உடல் பைகளைக் கடத்திக்
கொண்டு செல்லுகிறது-வாகனம்
தன் சக்கரங்களின் ஊடாக
மருத்துவ மனைக்கு
இறப்போ, பிறப்போ இன்ன பிறவோ
வலி அடைத்த பைகள் கிடத்தி
இருக்கிறது உள்ளே, ஆரோக்கியத்தின்
உறவுகளுடன் கூட.
பெரு நகரங்களில், பெரிய தெருக்களில்
மட்டுமல்ல --
எல்லா வீதிகளிலும் அலறி அலறி
பயணிக்கிறது -தெருவின் மீதும்
விபத்தில்-வீட்டின்  உள்ளும் வெளியிலும்,
 ஏதேதோ இடங்களில் வலியின்
அலறலும், முனகலும் -நிறைந்து, உறைந்து
வலி நீங்குமா? உயிர் நீங்குமா?
பயணிக்கிறது வாகனம், வாகனங்கள்
எப்போதும், எங்கெங்கும்.
-----------------