Thursday, December 12, 2013

அம்பேத்கார் வகை இலக்கியம்- ஒரு பார்வை

.

    அம்பேத்கார் இலக்கியவகைப் புரட்சி 1960களின் ஆரம்பத்தில் தொடங்கி உள்ளது எனலாம். மராட்டிமொழியில் அறுபதுகளில் அம்பேத்கார் வகை இலக்கியங்கள்- அம்பேத்காரின் எண்ணங்களைத் தாங்கிய எழுத்துக்கள்- காணக் கிடைத்தன. குறுகிய காலத்திலேயே மராட்டி இலக்கிய உலகில் அம்பேத்கார் வகை எழுத்துக்கள் என்ற தலித் இலக்கியம் இன்றியமையாததாக, ஒதுக்கித்தள்ள முடியாத முக்கியமான இடத்தை அடைந்துவிட்டிருந்தது. ‘சுகாவா', ‘அஸ்மிதா ‘தர்ஷ்', ‘சமுசித்' ஆகிய இதழ்களில் அம்பேத்காரின் முழக்கங்கள் முன்னமேயே காணக்கிடைக்கின்றன. இத்தகைய இதழ்கள் பிராமண்யத்தை எதிர்த்துத் தாக்கும் எழுத்துகளுக்கு முதலிடம் கொடுத்துப் பிரசுரித்தன. அத்தகைய நிகழ்வுகளுக்கு அதிக முக்யத்துவம் கொடுத்தன. மேல் சாதியினராலும், நிலச்சுவாந்தார்களாலும் அடக்குமுறைக்கு ஆளான, உதவியற்ற தலித் மக்களின் துன்பங்களை வெளியிட்டு வந்தது. தலித்துகளால் படைக்கப்பட்ட மேல்சாதியினருக்கு எதிரான கருத்துக்களை அடிப்படையாகக கொண்ட படைப்புக்களுக்கு சிறப்பான இடம் கொடுத்துப் பதிப்பித்தன. “சமூக-பொருளாதார சமன்பாடு என்பது சமூகத்தில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட ‘உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள்' என்ற சாதி நிலையை அழிந்து ‘எல்லோரும் சமமே' என்பதை நிலைநாட்டுவதுதான்” என்று அம்பேத்கார் தனது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார். அம்பேத்கார்  ‘வகுப்புப் பிரிவுகள் மனித விரோத செயல்' என்று தனது எழுத்துகளில் சொல்லி இருக்கிறார்.  அவர், தனது எழுத்துக்கள் மூலம் வேறு ஒரு சமூக அமைப்பை, வழிமுறையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார் எனலாம். அது அம்பேத்காரின் எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் இந்த வகை இலக்கியங்களில் தீண்டாமை, விலக்கிவைத்தல் ஆகிய சொற்களுக்குப் புதிய பொருள்விளக்கம் அளிக்கப் பட்டது. இத்தகைய சொற்கள் இழிவானவை என்று எடுத்துரைக்கப் பட்டன.

    மராத்தி மொழியில் கவிஞர் நாம்தேவ் டசாலின் ‘கோல்பீடா' (முழுவட்டம்), அம்பேத்காரின் எழுச்சியை விவரித்தது. இவரின் கவிதைகளில், கலகமும், தீண்டாமை எதிர்ப்பும் தீவிரத்துடன் வெளிப்பட்டு இருக்கும். அவைகள் அனைவரையும் எழுச்சி பெற வைக்கும் தகுதி வாய்ந்தது. பாபுலால் பாகுல்-உடைய படைப்புகள் டசாலின் படைப்புக்களிலிருந்து வேறுபட்டது. பாபுலால் பாகுலின் எழுத்துக்களில் முதிர்ச்சியும், மார்க்சீசியக் கொள்கைகளின் சார்பும் இருக்கும். இவரின் படைப்புக்கள் வேறு விதமாக சிந்தனைக் கவரும். மராட்டி மொழியில் நவீனப் படைப்பு முறைக்கு பாகுல் அவர்களின் எழுத்து பெரும் தூண்டுதலாக இருந்தது. மராட்டி மொழியில் தலித் இலக்கியத்தில் கவிதையுடன் கூடவே உரைநடை இலக்கியமும் நவீனத்தையும் எழுச்சியையும் உடன் கொண்டதாக வெளிவந்தது. இவை ஏற்கனெவே முந்தைய கால கட்டத்தில் இருந்த படைப்புகளின் சாயலற்று வெளியாயின.
    மராத்தி மொழியில் படைக்கப்பட்டு வரும் சிறுகதைகளில், தலித் மக்களின் இயல்பான வாழ்க்கை, இயல்பாகவே பதிவு செய்யப்பட்டிருக்கும். தலித் மக்களை நல்ல முறையில் நிலை நிறுத்தவும், அவர்களுக்கு இன்னமும் மரியாதை சேர்க்கும் விதமாக இவ்வகை எழுத்துக்கள், இலக்கியங்கள் புதிய புதிய கருப்பொருளைக் கொண்டு இருந்தன. அதாவது, மராத்தி மொழியின் புத்திலக்கியம் அம்பேத்கார் வகை எழுச்சியின் வரமே.
    இந்தக் கட்டுரையில் மக்களின் நிலை பற்றியும், மதிப்பீடு பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தப் பார்வையில் தலித் மக்களின் வளர்ச்சியும் எப்படி மாற்றம் அடைந்தது என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது.  மராத்தி மொழியில் அம்பேத்கார் வகை இலக்கிய எழுத்தாளர்களின் நீண்ட பட்டியல் இருக்கிறது. அதில் வாமன்ஹோவால், கேஷவ் மேஷ்ராம், அர்ஜுன் டாங்கலே, சுகராம் ஹிம்வாலே, யோகிராஜ் வாக்மரே, ஷரண்குமார் லிம்பாலே, பாஷ்கர் சந்தனாஷிவ், ப்ரகாஷ் காரத், யோகேந்திர மேஷ்ராம், ஊர்மிளா பவார், பீமசேன தேடே ஆகியவர்கள் குறிப்பிட தகுந்தவர்கள். மராத்தி மொழியில் அம்பேத்காருக்கும் முன்னதாகவே ஜோதிபா புலே தன் எழுத்துக்களால் சமூகத்தின் பண்பாடு, தூய்மை ஆகியன குறித்துக் கேள்விகளை எழுப்பி உள்ளார். அதன் மூலம் இந்தவகை எழுத்துக்களுக்கான ஒரு பாதையை முன்னமே உண்டாக்கி விட்டிருக்கிறார். அம்பேத்கார் தன் எழுத்துக்களில் புலேயின் கருத்துக்களை வெளியிட்டார். அவைகள் வெடித்துக் கிளம்பிப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கின.
    அம்பேத்கார் அகை எழுத்துக்கள் சாதியையும், வகுப்புப் பிரிவுகளையும் அதன் ஏற்ற தாழ்வுகலையும் நிராகரிக்கிறது. இத்தகைய பிரிவுகள் பிராம்மணர் களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுகிறது.

    மராத்தி மொழியுடனேயே, மலையாளத்திலும் அம்பேத்கார் வகை படைப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டன.  அதன் குரல் பிராம்மண எதிர்ப்பு. இந்தவகை எண்ணங்களுக்கு அம்பேத்காருடன் கூட நாராயணகுருவும் இருக்கிறார். இவற்றிற்கு நல்ல பரந்துபட்ட வாசிப்பும், ஆதரவும் கிடைத்தன. கல்லாட ஷஷி, ராகவன் அத்தோலி, கே.கே.தாஸ், சஜ்ஜி கவிக்காடு, ஜி.சஷி ஆகியோர் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே  தலித் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்திய படைப்பாளிகள் எனலாம். கல்லாட ஷஷி தன் கவிதைகளில் தலித் அழகியலைப் படைத்தவர். அவருடைய கவிதைகளில், தொழிலாளர் வர்க்கத்தினரைப் பற்றி எழுதப்பட்டவற்றில் இந்த அழகியல் வெளிப்பட்டது. அவருடைய கவிதை தொகுதியான ‘பாரத மகள்'  விவாதத்தை உண்டாக்கியது.  அதில் அவர் ஒழுக்கத்தைக் கேள்விக் குறி ஆக்கியிருக்கிறார். அவர் ஒழுக்கம் என்பதை நிறுவிய மக்களை எதிர்க்கிறார். இவருடைய ‘சிலந்தி' கவிதை பசியைப் பற்றியது. ராகவன் அத்ஹோலியின் கவிதைத் தொகுப்பான ‘மௌன சிலைகளின் காதல்' தலித் மக்களின் அனுபவங்களின் தொகுப்பு. தலித் கவிஞர்களில் ஒருவரானவர் கே.கே.எஸ். சாதிப் பிரிவுகளை மறுக்கும் கவிதைகள் இவருடையது. இதில் மிகவும் சிறப்பானவரும் கூட. இவருடைய கவிதை வரிகள் இவை- ‘நான் மீண்டும் பிறப்பெடுப்பேன்/ வைகறையின் துகில் அணிந்து/சிங்கத்தின் பற்களுடன் காத்திருப்பேன்/இந்த பூமியின் வசந்தம் எங்களுடன் பகிரப்பட வேண்டும்'.
    இதே வரிசையில் அப்பையன் கவிதைத் தொகுதியான ‘மதிய உறக்கத்தின் கனவுகள்' பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இவர் கவிஞர் மட்டுமல்ல. ஒரு சிற்பக் கலைஞரும் கூட. இரண்டிலும் அம்பேத்காரின் எழுச்சி காணக் கிடைக்கிறது.
    கன்னட மொழியில் ‘தலித்' என்ற இதழ் அம்பேத்கார் வகை எழுத்துக்களை சிறந்த முறையில் வெளியிட்டிருக்கிறது. புட்டண்ணா, டி.வி. ராஜசேகர், சந்திரசேகர் பாட்டீல் ஆகியோர் இவ்வகைப் படைப்புக்களைத் தீவிரமாக தந்துள்ளவர்கள். கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய அனைத்து வடிவங்களிலும் தலித்துகளின் வாழ்க்கைக்கரு படைப்பாகி இருக்கிறது. சென்னப்பா, வாலிகார், பர்கூர் சந்திரப்பா, தேவனூர் மகாதேவன் ஆகியோர் இந்த வகை படைப்பாளிகள். இவர்கள் தலித்துகளின் களத்தை பரந்துபட்டதாக அகலப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் பலர் மார்க்சீய சிந்தனை உடையவர் களாகவும் இருந்திருக்கிறார்கள். கன்னட மொழியில் அம்பேத்கார் வகை படைப்புக்களை எழுத்தாளர்கள், எந்தவிதமான மேல் பூச்சும் அற்று பதிவு செய்திருக்கின்றனர். இயல்பான சொற்கள் கொண்டவை இவை. கன்னட மொழி இலக்கியத்தில் புரட்சி, கலகம், பஞ்சமர், சூத்திரர் ஆகியவை இவ்வகை எழுத்துக்களைப் பதிவு செய்த இதழ்களில் குறிப்பிடத்தக்கவை. சந்திரசேகர பாட்டீலின் படைப்புக்களில் கரு தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையே. இவரின் படைப்புகள் மிகுந்த கொந்தளிப்பைக் கொண்டவை.

    ஹிந்தி மொழியில் தற்காலத்தில் அம்பேத்கார் வகை எழுத்து மெல்ல மெல்ல விழிப்படைந்து  உள்ளது. மராத்தி, கன்னடம் போன்ற மொழிகளில் தலித் இலக்கியம் வந்து வெகு காலத்திற்குப் பிறகுதான் ஹிந்தியில் இவ்வகை இலக்கியப்படைப்புகள் உருவாகத் தொடங்கின. 1985க்குப் பிறகுதான் ஹிந்தி மொழியில் அம்பேத்கார் வகை எழுத்துக்களின் எழுச்சி உருவாகத் தொடங்கியது. மாதா பிரசாத்தின் ‘நூறு பீமன்' இந்த ஆண்டில்தான் வெளியானது. இவரின் மதிப்பீடுகள் அம்பேத்காரின் எண்ணங்களுடன் வேறுபாடு கொண்டவை. மாற்றுக் கருத்து இருந்தது. இந்த வகையில் ஓம்பிரகாஷ் வால்மீகி, மோஹன் தாஸ் நைமிஷ்ராய், டாக்டர். தர்மவீர், கவல் பாரதி, ஷ்யோர் ராஜ் சிங்,பேசைன், டாக்டர்.என்.சிங் ஆகியோர் ஆவர். 1988 இல் இந்திய தலித் எழுத்துக்களின் அரங்கில் ‘வலி எழுப்பிய அலறல்' நூல் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, ஓம்பிரகாஷ் வால்மீகியின் ‘நூற்றாண்டு கால துயர்' 1989 இல் வெளியானது. இதே சமயத்தில் மோஹன்தாஸ் நைமிஸ்ராயின் ‘ஒரு நீண்ட வாக்குமூலம்' வெளிவந்தது. இதே ஆண்டில் ஷ்யோர்ராஜ் சிங் அவர்களின் ‘புதிய விளைச்சல்' வெளியானது. ஹிந்தி மொழியில் அம்பேத்கார் பாணி எழுத்துக்கள் இதிலிருந்துதான் தொடங்கியது எனலாம்.

    1991 ஆம் ஆண்டு முதல் இவ்வகை எழுத்துக்கள் புனைவு அல்லாதது என்ற வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. அம்பேத்காரின் கருத்துக்களை இவ்வகை படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் கவிதை விமர்சனம், எண்ணங்கள், தன் வரலாறு, நினைவு கூர்தல் போன்ற பலவகையில் நூல்கள் வெளிவந்தன. ஓம்பிரகாஷ் வால்மீகியின் தன் வரலாறு ‘எச்சில்' 1997 இல் வெளியாகி, நிறைய விமர்சனத்திற்கும் ஆளானது. மோஹன்தாஸ் நைமிஷ்ராயின் தன் வரலாறு ‘அவரவர் கூண்டு' 1995 இல் வெளியானது.   அதையும் புறந்தள்ளாமல் குறிப்பிட வேண்டும். இந்த நூல் ஹிந்தி மொழியின் முக்கியப் படைப்பாளிகளை பாதித்தது எனலாம். கவிதைத் தொகுதிகளில் ஓம்பிரகாஷ் வால்மீகியின் தொகுப்பான ‘போதும் நிறைய அனுபவித்தாயிற்று' மற்றும் கவல் பாரதியின், 'உன் தவம் இப்போது என்னவாயிற்று?' தொகுப்பும் முக்கியமானவை. ஓம்பிரகாஷ் வால்மீகியின் ‘சலாம்' சிறுகதைத் தொகுப்பு 2000ம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலில் தலித் மக்களின் வாழ்க்கைப் பதிவு என்பதுடன் கூட இந்த நூற்றாண்டின் இறுதி குரல் என்ற கூற்றுடன் வெளியானது. இருபத்தியோராம் நூற்றாண்டுத் துவக்கம் ஆவதற்கு முன்னரே தர்மவீரின் நூலான ‘கபீர் பற்றிய ஆய்வு' 1997 இல் வெளிவந்துவிட்டது. அந்த நூல் ராமச்சந்திர சுக்ல, ஹஜாரிப்பிரசாத் த்விவேதி, ஹரி ஔத் போன்ற படைப்புக்களின், கபீர் பற்றிய பிற ஆராய்ச்சியாளரின் வரிசையில் இணந்தது. டாக்டர். தர்மவீரின் ஆய்வு, அம்பேத்கார் வகை எழுத்துக்களின் குரலாக ஒலித்தது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
    இருபத்திஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான சிறந்த நூல்களில் சூரஜ்பால் சௌஹான் அவர்களின் ‘விலக்கப்பட்டவன்' தன் வரலாறு முக்கியமகக் கருதப்பட வேண்டியது. இதற்கு முன்னதாகவே வால்மீகியின் ‘தலித் படைப்புகளில் அழகியல் 2001-ம் ஆண்டு வெளிவந்துவிட்டது. இந்த நூலில் அம்பேத்கார் வகை இலக்கியப் பார்வை தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.  தலித்துக்களின் கேள்விகளைத் தீவிரமாகக் குரல்எழுப்பி ஒலிக்கும் ஹரிராம் மீணாவின் கவிதைக் காவியம் ‘யட்சன் அழவில்லை' (2003) சிறந்த நூல். ஏன் எனில், இதில் காளிதாசனின் ‘யட்ச காவ்யம்' மறுபடைப்பாக்கப் பட்டிருந்தது.  மீணா, சிறந்த, தரமான கவிதைகளைக் கொடுப்பவர். இயற்கையை வாழ்க்கையுடன் இணைத்து எழுதுவதில் வல்லவர். சிறுகதைத் தொகுதிகளும், நாவல்களும் கூட இதே வகையில் எழுதப்பட்டு கூடவே வெளிவந்தன. எம்.ஆர். ஹார்நோட் அவர்களின் நாவல், ‘ஹிடும்பு' மலைவாழ் தலித் மக்களின் வாழ்க்கையைக் கூறும் நூல். குறிப்பிடதக்க நூல். இந்த நூலில் கதையின் நாயகன், தலித் தன் நிலத்தைக் காப்பாற்றப் போராடுகிறான். இந்த நூல் சமுதாயத்தின் நெறிமுறைகளைத் தீவிரமாகக் கேள்வி கேட்டிகிறது. மூல்சந்த் சொனாகரின் ‘இரு வரிக் கவிதை' நூல் இதே வேளையில் வெளியானது. இதிலும் அம்பேத்கார் பாணி எண்ணங்கள் பதியப்பட்டுள்ளன.

    இப்போது அம்பேத்கார் வகை எழுத்துக்களில் புதிய இணைப்பாகப் பெண்ணின் படைப்பும் இணைந்துள்ளது. மெல்ல மெல்ல இந்த வகை எழுத்துக்களில் பெண்களின் பங்களிப்பும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகிறன. இந்தப் பெண் எழுத்துக்கள் உயர்சாதி பிராம்மணர்களை, பாரம்பரியக் கூறுகளை கேள்விக்குட்படுத்துவதுடன், தந்தைமை வழிப் பாரம்பரியத்தையும் அதே தீவிரத்துடன் கேள்விக்குட்படுத்துகிறது. குற்றம் சாட்டுகிறது. இந்தப் பெண் படைப்பாளிகள் ‘தன் வரலாறு' என்ற வகைமையைக் கையெலெடுத்து இருக்கிறார்கள். இங்கு கௌசல்யா பைசந்திரியின் தன் வரலாறு 'இரண்டாம் சாபம்' சிறந்த நூல். இதில் அவர் தனக்கு நேர்ந்த துன்பங்கள், அவமானங்கள் ஆகியவற்றை வாக்காகக் கொடுத்திருக்கிறார். இந்தப் பெண் எழுத்துக்களில், புதிய கோணம் தென் படுகிறது. இவர்கள் சமத்துவத்தையே குறிகோளாகக் கொண்டு இயங்குவதால், இவை அம்பேத்கார் வகையில் முதன்மை வாய்ந்தவை.
    இதைப் போலவே அம்பேத்கார் -தலித்- வகை இலக்கியம் ஹிந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுடன் கூட இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ளன.  ‘புனையப்பட்ட சமூகம்' சச்சிதானந்தனின் நூல். காவிய வகையில் எழுதப்பட்டது. அது ஒரு வகையில் தலித் கவிதையாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதில் அவர் மராத்தி, குஜராத்தி, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளின் தலித் கவிஞர்களை  இணைத் திருக்கிறார். அவரின் கூற்றுப்படி, இந்தக் கவிஞர்களுக்கு, பொருளாதார ஏற்ற தாழ்வைவிடவும், சமூகத்தில் சாதி ஏற்ற தாழ்வு இன்னமும் வலிமையானது. அருண் கம்ளே, யஷ்வந்த் மனோஹர், அர்ஜுன் தாங்கே, ஜே.வி.பவார், நாம்தேவ், டசால், தயா பவார், ப்ரகாஷ் ஜாதவ், புஜங்க மேஷ்ராம், யோசப் மைக்வான், ஜயந்த் பரமார், மங்கள் ரடௌர், கிசன் சோமா, சித்தலிங்கப்பா, ஓம்பிரகாஷ் வால்மீகி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள். அம்பேத்காரிய எழுத்துக்களை, இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்களில் வாசித்தால், அம்பேத்காருடன் மறு சந்திப்பு நிகழ்ந்தாற்போல இருக்கிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. யாருக்கும் இருக்காது. அம்பேத்காரின் எண்ணங்களுக்கு ஒரு புதிய விளக்கமும், வாசிப்பும் கிடைக்கிறது.

ஹிந்தி மூலம்-அவதேஷ் நாரயண்.
தமிழ் மொழி வழி-க்ருஷாங்கினி.
------------------

No comments: